வீடுகளில் மின் கட்டண பயன்பாட்டை கணக்கெடுப்பதுடன் அதற்கான தொகையை உடனே தெரிவிக்க உதவும் அலைபேசி செயலி பரிசோதனை திருப்திகரமாக இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு மற்றும் அதற்கான தொகையை கணக்கெடுப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளுக்குச் சென்று மீட்டர் பெட்டிகளில் கணக்கெடுத்து பின்னர் அவர்கள் வைத்துள்ள எந்திரங்களின் மூலம் அதற்கான தொகையை கணக்கிட்டு செல்வது வழக்கம். அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் தொலைபேசி எண்ணுக்கு மின்கட்டணம் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்படுகிறது.
இதற்கு மாறுதலாக கட்டணத்தை தெரிவிக்க மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.அந்த செயலி, மின் பயன்பாடு கணக்கெடுக்க செல்லும் ஊழியர்களின் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து தரப்படும்.அதனுடன், மீட்டரையும், அலைபேசியையும் இணைக்கும், ‘கேபிளும்’ வழங்கப்படும். கணக்கீட்டாளர், மின் பயன்பாட்டை கணக்கெடுத்து செயலியில் பதிவிட வேண்டும். உடனே அதற்கான கட்டணம் கணக்கிடப்பட்டு, மின் வாரிய, ‘சர்வர்’ மற்றும் நுகர்வோரின் அலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். இதற்கான பரிசோதனை ஒரு சில இடங்களில் செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முயற்சி வெற்றிகரமாக இருந்ததாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.