தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வரவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பசுமை பரப்பின் விகிதத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்துவதை பழகிக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.