தமிழகத்தில் கடந்த வருடங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்துகொண்டே வந்தது. அதனால் தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வழக்கம் போல பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதே மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னை மாநகராட்சியில் தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பொது இடங்களுக்கு வருவோர் முக கவசம் அணிவதையும், தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதும் உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.