தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதோடு பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்தன. இதன்காரணமாக நோய்தொற்று கணிசமான அளவில் குறையத் தொடங்கியது. இதனை அடைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அதோடு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
ஆனால் இந்த தளர்வுகள் அனைத்தும் தேர்தலுக்காக தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் நோய் பரவலின் வேகம் குறித்த உண்மைத் தகவலை மறைத்து தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது எனவும் சில விவாதங்கள் எழுந்து வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தான் இதுபோன்ற தளர்வுகளை தமிழக அரசு செய்துள்ளது எனவும், தேர்தலுக்கு பின்னர் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டால் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் 100 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது பாராட்டுதலுக்குரியது ஆனால் தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்வதே மக்களுக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. அதோடு வரும் இரண்டு வாரங்களுக்கு மிக கவனமாக செயல்பட வேண்டும் ஏனெனில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சிலர் தேர்தலுக்காக தான் எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறார்கள் என்பது போன்ற கருத்துக்களைக் கூறி வருகின்றனர். யாராலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டவோ அல்லது அதிகரித்து காட்டவோ முடியாது. தேர்தலுக்கும் கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என அவர் கூறினார்.