பேருந்துகளில் பயணம் செய்யும் போது மற்ற பயணிகளுக்கு எரிச்சலூட்டும் விதமாக செல்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரம் இல்லாததால் நடத்துனர் ஒரு எல்லைக்கு மேல் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பதை மற்றும் கேம் விளையாடுவது போன்றவை மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால்,இவை அனைத்திற்கும் தடை விதிக்கக்கோரி திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி என்பவர் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது,வீடியோ கேம் விளையாடுவது மற்றும் பாட்டு கேட்பது உள்ளிட்டவைக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பரிந்துரை செய்தது. இதுபோன்ற நடைமுறை கர்நாடக மாநிலத்தில் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக ரயில்களில் பயணம் செய்யும்போது சத்தமாக பேசுவதற்கும் செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தேவைப்பட்டால் பயணிகள் இயர் போன் மூலமாக பாட்டு கேட்டுக் கொள்ளலாம்.
இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பரிந்துரையை சென்னையில் மட்டும் அமல்படுத்தலாமா அல்லது தமிழகம் முழுவதும் அமல்படுத்தலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.