மத்திய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பாகவுள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ் நாடு முழுவதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன. அதாவது ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர், ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் போன்றோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதையடுத்து மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது அந்த ஆண்டு மார்ச் 31 அல்லது ஏப்., 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி பல வருடங்களாக இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு கேந்திர வித்யாலயா பள்ளியிலும் அதிகபட்சம் 10 மாணவர்களை எந்த கட்டணமும் இன்றி சேர்க்க வழிகாட்டல் தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். ஆகவே அந்தந்த மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.