மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரத்தில் வாலிபர் அரங்க மாநில அரசியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சில முக்கியமான அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்று முதல்வருக்கு நாங்கள் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் பலன் தராது என்பதால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தமிழக அரசு அந்தக் கோரிக்கையை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் வகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் போக்குவரத்து பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
அரசு ஊழியர்கள், போக்குவரத்து பணியாளர்கள், துறை ஊழியர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் சிறு தொழில்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு சிறு, குறு தொழில்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.