கல்விஉரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பை அரசு வழங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வருடந்தோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெற்று வருகின்றனர். 1 -8 ம் வகுப்பு வரை ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கலாம். இத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேருவதற்கு பல்வேறு நிபந்தனைகள் இருக்கிறது. அந்த வகையில் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும்.
இதையடுத்து தேர்தெடுக்கப்படும் பள்ளி மாணவரின் இருப்பிடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும். 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பம் கோளாறு காரணமாக ஏப்ரல் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த வருடம் 8,234 தனியார் பள்ளிகளில் 94,000 இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இதற்கென 1.42 லட்சம் பேரிடமிருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது.
அதில் 2.60 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே கட்டாயகல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பெற தகுதியுள்ளவை ஆகும். இந்த வருடம் ஒதுக்கப்பட்ட இடங்களை தாண்டி அதிகமான விண்ணப்பங்கள் வந்து இருப்பதால் சென்ற மே மாதம் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதால் சேர்க்கையும் அதிகரித்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வருடம் தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையானது 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.