தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி விலை பட்டியலிலிருந்து ஒரு ரூபாய் கூட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால்,கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் இருந்து வரும் குறைபாடுகளை சரிசெய்ய என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை விட ஒரு நிமிடம் கூட கடைகளைத் திறந்துவைத்து மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. கூடுதல் நேரம் கடைகளை திறந்து வைத்து மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரும்பாலான மதுக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மதுபாட்டில்கள் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கும் நடைமுறை செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவே ரசீது வழங்கும் நடைமுறை கொண்டுவர வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்காக விலைப்பட்டியல் வைக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.