கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து இருந்தாலும் 3 வருடங்களுக்கு ஒருமுறை மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான அவரது சுற்றறிக்கையில் “அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒருசில கோயில்களில் 12 வருடங்கள் முடிந்தும் திருப்பணி மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றன. கும்பாபிஷேகம் நடந்து சில வருடங்கள் ஆன பல்வேறு கோயில்களும் பொலிவிழந்து காணப்படுகிறது.
அவ்வாறு உள்ள கோயில்களில் திருவிழாக்களின் போது கோபுரம் நீங்கலாக, பாலாலயம் செய்யாமல் கோயில் முன் மண்டபம், அர்த்த, மகா மண்டபம், மடப்பள்ளி, மதில்சுவர் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் பழுதுபார்த்து புதுப்பிக்க வேண்டும். இதையடுத்து இரும்புக் கதவுகளுக்கு வர்ணம் தீட்டுதல், சிதைவுற்ற பகுதிகளை சரி செய்தல், மரக்கதவுகளை பழமை மாறாமல் புதுப்பித்தல் ஆகிய பணிகளை அவ்வப்போது செய்ய வேண்டும்.
இந்த பணிகளை குறிப்பிட்ட கால இடைவெளியிலோ (அல்லது) கோயில் பொலிவிழந்து காணப்பட்டாலோ, கும்பாபிஷேகம் நடந்து 12 வருடங்கள் முடிவடைய வேண்டும் என காத்திருக்காமல் உடனே மேற்கொள்ள வேண்டும். இதற்குரிய கால இடைவெளி 3 வருடங்களுக்கு ஒருமுறை என வரையறுக்கப்படுகிறது” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.