தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பல லட்சம் மக்கள்,ரேஷன் அட்டை மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. ஆனால் ரேஷன் அரிசி, தற்போது தரமற்ற முறையில் விநியோகிப்பதாக பல மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 800 ரேஷன் கடைகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 645 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, வேடப்பாளையம், திம்மாவரம் உள்ளிட்ட கிடங்குகளில் மட்டும் சுமார் 10,000- மெட்ரிக் டன் அரிசி மூட்டைகளில் உள்ள அரிசிகளின் நிறம் மாறி புழு மற்றும் வண்டுகள் மொய்த்து காணப்பட்டுள்ளது. எனவே இந்த தரமற்ற அரசி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 1445-ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அரிசியின் தரத்தை சோதிக்கும் ஆய்வாளர்களும் அதை கண்டு கொள்ளவில்லை. இதனால் இதுவரை சுமார் 1 கோடி அரிசி மூட்டைகள் பாழாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து கிடங்குகளில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளது. மேலும் முளைத்த நிலையிலும் உள்ளதால் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆகவே இதன் காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை கிடங்குக்கு திருப்பி எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே 1 கோடி அரிசி மூட்டைகள் தரமற்ற அரிசிகளாக உள்ள சூழலில், தமிழகத்தில் ரேஷன் அரிசியை மட்டும் நம்பி வாழும் மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.