தமிழக எல்லைக்குள் நுழைந்த சசிகலாவை வரவேற்க ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கோலாகலமாக வரவேற்பு அளித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சசிகலா இன்று தமிழகம் வந்து கொண்டிருக்கிறார். சசிகலா புறப்பட்ட காரில் அதிமுக கொடி பறந்தது. இந்நிலையில் ஓசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரிலிருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாருடன் அதிமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில் வேறு ஒரு காரில் சசிகலா வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் சசிகலா தமிழக எல்லைக்குள் நுழைந்த உடனே அத்திப்பள்ளி பகுதியில் பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் ஒரு கையில் அதிமுக கொடியையும், மறுகையில் அமமுக கொடிகளையும் வைத்து மேள தாள இசை களுடன் நடனமாடி சசிகலாவுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். பலர் சசிகலாவின் காரின் அருகே சென்று தரையைத் தொட்டு கும்பிட்டு செல்கின்றனர்.