தமிழக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் தினந்தோறும் மாணவர்களின் செயல் திறன், வருகை பதிவேடு, கற்பிக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை ஆசிரியர்கள் தயார் செய்வதால் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்த முடிவதில்லை என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அதோடு சில பதிவேடுகளை வீட்டிற்கும் எடுத்து சென்று எழுதுவதால் தங்களால் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவில்லை எனவும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் தற்காலிக பதிவேடு, பில் பதிவேடு, அபராத பதிவேடு, நிரந்தர சம பதிவேடு, கூடுதல் பண பதிவேடு, நிலுவையில் உள்ள சிறப்பு கட்டண பதிவேடு, சம்பள பிடித்தம் பதிவேடு, கருவூல பதிவேடு உள்ளிட்ட 11 பதிவேடுகளை எழுத வேண்டாம் என கூறியுள்ளது. மேலும் பாடக் குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் ஆசிரியர்கள் எழுதினால் போதும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.