தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
மேலும் விளக்கம் கேட்டு பல்வேறு நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த மருத்துவர் பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் போராட்டத்தில் ஈடுபட்டதால் செய்யப்பட்ட பணியிட மாற்றம் பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சேவை துறையில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு மருத்துவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். போராட்டத்தின்போது, அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு தரப்பில் மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது.