ஆண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முதலில் போட்ட 5 கையெழுத்துகளில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணமும் ஒன்றாகும். இதனால் சுமார் 5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் பெண்களைப் போல ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தியாகிகள் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியை போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் செயல்பட்டு வருவதால் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்க முடியாது என்று கூறினார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அவர் திரும்பிவந்தவுடன் தமிழகத்தில் அதிகமான தொழில்கள் துவங்க வாய்ப்புவுள்ளது. மேலும் போக்குவரத்துத்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்றும் அது விரைவில் சரி செய்யப்படும் எனவும் கூறினார்.