தமிழக பேருந்து நிலையங்களில் ஒரு மாற்றுத்திறனாளி நின்று கொண்டிருந்தாலும் பேருந்தை நிறுத்தி அவரை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறும் வகையில் தமிழக பேருந்துகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. மேலும் 10 சதவிகிதம் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் தமிழக அரசு உறுதியளித்தது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மாற்றுத் திறனாளிகள் பேருந்து நிலையங்களில் நின்றுகொண்டிருந்தால் உடனடியாக பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.