தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் மாநில அளவிலான போட்டிகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது நம்ம ஸ்கூல் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று தற்போது உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு உதவும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது nammaschool.tnschool.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 37 ஆயிரம் அரசு பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கும் தேவையான நிதி, மேசை மற்றும் இருக்கை உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.