தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வு பெற்ற பின்பு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பெரும்பாலானோர் பயனடைந்து வந்தனர்.
இதற்கிடையில் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003ஆம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டம் மாதமாதம் ஓய்வூதியம் அளிக்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த புதிய திட்டத்தினை அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்த்து வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் சார்பாக சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவம்பர் 27ஆம் தேதி வழங்கப்பட்டது. எனினும் அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
அதேநேரம் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதற்கு முன்பாக புதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு நிதி எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரியாமல் இருந்தது. இதனால் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஓய்வு பெற்றும், பணியின் போது உயிரிழந்தும், விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, புதிய ஓய்வூதியத் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்பட்ட நிதி எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரம், சுமார் 10 வருடங்களுக்கு பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலமாக வெளிவந்தது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை கூட இருக்கிறது. இதில் புதிய திட்டத்தை ரத்து செய்வதோடு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும், பங்களிப்பு நிதியின் விவரம் தெரியவந்துள்ளதால் ஓய்வூதியம் கிடைக்காமல் இருப்பவர்களுக்கான தொகை உடனடியாக வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் நடப்பு கூட்டத்தொடரில் அது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்பது சந்தேகம்தான்.