Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்….. இன்ப செய்தி சொல்லுமா அரசு?…..!!!!

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போதைய நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியாகி வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தானில் மாநில சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் அண்மையில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பை மையமாக கொண்டு முது கலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவரான ராமு, தமிழகம் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பி உள்ளார்.

அதில் ராஜஸ்தான் அரசு அறிவித்ததை  போன்றே தமிழகத்திலும் 2004 ஜனவரி 1ஆம் தேதிக்கு பின், பணியில் சேர்ந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என்று ஊடகங்கள் மூலம் திமுக சார்பாக பேட்டி அளிக்கப்பட்டது. இதை தற்போது நினைவு படுத்துகிறோம் என்று மாநில தலைவர் ராமு சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பணிபுரிந்து வரக்கூடிய லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்களது முக்கியமான வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த எப்போது அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஆகவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மாநில தலைவர், முதல்வருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |