தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. எனவே ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருக்கிறது.
இந்த நிலையில் ஆசிரியர் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், நடப்பாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை இதுகுறித்து ஆலோசித்து பொது மாறுதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதோடு மட்டுமில்லாமல் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
அதன்பிறகு கடந்த ஜனவரி 24-ஆம் தேதி முதல் பணி நிரவல் கலந்தாய்வு, பதவி உயர்வு, இடமாறுதல் தொடங்கியது. அதேபோல் விதவைகள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்த நிலையில் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த புதிய விதிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பட்சத்தில் அவர்கள் தற்போதைய பணியிடங்களில் ஓராண்டு கட்டாயம் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையை நிர்வாக மாறுதலுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கலந்தாய்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.