தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஜனவரி மாதம் மழை பெய்ய தொடங்கியது. அதன் காரணமாக நெற்பயிர்கள் மற்றும் காய்கறிகள் என பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னவெங்காயம் தோட்டத்திலேயே அழுகியது. இதனால் பெரம்பலூரில் உள்ள வெங்காய மண்டிகளில் வெங்காய வரத்து குறைந்தது. மணப்பாறையில் உள்ள காய்கறிகள் உற்பத்தி கடுமையாக சரிந்தது. இதனால் காய்கறிகளின் விலை உச்சம் தொட்டுள்ளது. இதற்கு மத்தியில் பெட்ரோல் டீசல் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால் திருச்சி காந்தி மார்க்கெட் டுக்கு காய்கறிகளை கொண்டுவரும் செலவினமும் அதிகரிப்பதால் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியது. குறிப்பாக கறிவேப்பிலை, வெங்காயம், முருங்கைக்காய், வாழை இலை போன்றவற்றின் விலை திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பல மடங்காக உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், முருங்கக்காய் 80 ரூபாய்க்கும், கருவேப்பிலை 85 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில் வாழையிலை வியாபாரி மதியழகன் இதற்கு முன் இரண்டு அடி நீள வாழைஇலை வழக்கமாக ஐம்பது பைசாவிலிருந்து இரண்டு ரூபாய் வரை மட்டுமே நிர்ணயம் செய்வோம் என்றும் ஆனால் இப்பொழுது இலை 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் இதற்கிடையே கல்யாண முகூர்த்தம் வந்ததால் அதுவும் ஒரு காரணம் என்று கூறினார். இந்த விலை ஏற்றம் ஆனது அடுத்த மே மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறினர்.
அதன் பிறகு திருச்சி காய்கறி வியாபாரியான ராஜா என்பவர் கறிவேப்பிலை வெங்காயம் முருங்கைக்காய் வாழை இலை இவை மட்டுமே ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்துள்ளது எனவும் மற்ற காய்கறிகளின் விலை எந்த விலை மாற்றமும் இல்லாமல் இருக்கும் எனவும் கூறினார். இக்காலகட்டத்தில் விலை பாதி அளவுக்கே இருக்கும்.வரத்து குறைவு ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் டீசல் விலையும் உயர்ந்ததால் லாரி வாடகை உயர்ந்துவிட்டது.
காய்கறி போக்குவரத்து வாகனங்களை செல்வமணி என்பவர் இயக்கி வருகிறார் . இவர், எனது வாகனத்தை வாரத்தில் 4 முறை காய்கறி லோடு ஏற்ற அனுப்பி வைப்பேன் என்றும் இப்பொழுது விற்பனை குறைந்துள்ளதால் இரண்டு முறை மட்டுமே செல்கிறது என்றும் கூறினார். அதன்பிறகு திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனரான விமலா என்பவர் பருவம் தவறிய மழையால் அறுவடை மிகவும் குறைந்து விட்டதாகவும். இதற்கிடையில் பூச்சிகளால் வாழை இலை மற்றும் கருவேப்பிலை பயிர்கள் பாதிக்கப்பட்டன எனவும் கூறினார். மேலும் அடுத்த கட்ட அறுவடை இன்னும் 30 நாட்களில் தொடங்கிவிடும் என்று கூறினார்.