தமிழகம் முழுவதும் பொது விநியோகம் திட்டத்தின் குறிக்கோள் எல்லா குடிமக்களுக்கும், உணவு வழங்குதல் ஆகும். இந்த பொது விநியோக திட்டம் வயியலாக அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஆகவே ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் ரேஷன் கடைகளில் காலியாகவுள்ள 3331 விற்பனையாளர்கள், 686 கட்டுநர்கள் காலிப்பணியிடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்ட அறிவிப்பினை ரத்து செய்து, 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளை பின்பற்றியும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெற்றும் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று சிறப்பு அறிவிப்பை அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் 23,502 முழு நேர ரேஷன் கடைகள், 9639 பகுதி நேர ரேஷன் கடைகள் என்று மொத்தமாக 33,141 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ரேஷன் கடைகளில் 31/12/2021 தேதி அன்று 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.