தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகள், மருந்தகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இத்தகைய கூட்டுறவு அங்காடிகளில் மளிகை பொருட்கள், சோப்பு மற்றும் எண்ணெய் வகைகள் என்று பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் அதனை விரும்பி வாங்குவது இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை ஆகாத மளிகை பொருட்களை ஊழியர்கள் வாங்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக கூட்டுறவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியபோது, கூட்டுறவு அங்காடிகளுக்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள் வருகின்றனரோ அதை சராசரியாக கணக்கிட்டு அதற்கு ஏற்ப மட்டும் பொருட்களை வாங்கி விற்க வேண்டும். ஆனால் துறை சார்ந்த அதிகாரிகள் கமிஷன் வாங்க வேண்டும் என்பதற்காக அதிகளவிலான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் விற்பனை ஆகாத பொருட்களை ரேஷன் கடைகள் உட்பட கூட்டுறவு சங்கங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறு ஊழியர்கள் வாங்கவில்லை என்றால் அவர்களது ஊதியத்தில் மாதம் ரூ1000 பிடித்தம் செய்து அதற்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். முன்பே கூட்டுறவு ஊழியர்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே ஊதியம் கிடைக்கிறது. அதிலும் பிடித்தம் செய்வது கூட்டுறவு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே கட்டாயப்படுத்தி பொருட்கள் விற்கும் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.