தமிழகம் முழுதும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று(பிப்..27) நடைபெற்று வருகிறது. இந்த முகாம் காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 43,051 இடங்களில் இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சொட்டு மருந்து முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழ்நாட்டில் போலியோ பாதிப்பு இல்லாத சூழல் இருக்கிறது. இந்த முகாம்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விடுபடக்கூடிய குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.