தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் சுகாதாரத்துறை, பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. தற்போது நடப்பாண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து பள்ளிகளும் காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து பாடவேளைகளிலும் பாடம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களை முழு அளவில் நேரடியாக பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்த வேண்டும். இதையடுத்து அரைநாள் அல்லது ஓரிரு மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பக்கூடாது. அனைத்து பாடங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆசிரியர்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.