தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் சான்றிதழில் பிழையில்லாமல் அச்சிட்டு வழங்க வேண்டும். எனவே பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின் போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவர்களுடைய தாய், தந்தை பெயர் ( அல்லது ) பாதுகாவலர் பெயர், மாணவருடைய பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கட்டாயம் மாணவர் சேர்க்கை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல் பள்ளி சேர்க்கை நீக்கல் பதிவேடு, பள்ளி சேர்க்கை விண்ணப்பம், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் தாய், தந்தை பெயர் ( அல்லது ) பாதுகாவலர் பெயர், மாணவருடைய பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் புதிதாக EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாற்றுச்சான்றிதழ், மாணவர் சேர்க்கை பதிவேடு, சேர்க்கை விண்ணப்பம் ஆகியவற்றில் மாணவர்களுடைய தாய், தந்தை பெயர், பாதுகாவலர் பெயர், மாணவருடைய பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பிழையின்றி தெளிவாக பதிவு செய்ய வேண்டும்” என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.