மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது.
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி, தினசரி இயக்கப்பட வேண்டிய 15 ஆயிரத்து 335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை 318, எம்டிசி 318, எம்இடிசி 40, விழுப்புரம் 573, சேலம் 445, கோவை 476, கும்பகோணம் 1,705, மதுரை 801, நெல்லை கோட்டத்தில் 665 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னையில் பேட்டியளித்த தொமுச பொருளாளர் நடராஜன், “நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நாளை தொடர்ந்தாலும் தமிழகத்தில் 60 சதவீதம் அரசு பேருந்துகள் இயக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று நாளை வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும். முன்னணி நிர்வாகிகள் மட்டுமே நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். மற்ற தொழிலாளர்கள் பணிக்கு செல்வார்கள் என்று கூறியுள்ளார்.