தமிழகம் சட்டமன்ற தேர்தலில் போது கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் அளவிலான நகைகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடனானது தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணை 2021 நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்ககளில் அதிகாரிகள் வாயிலாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. ஆகவே உண்மையான பயனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி நடைபெற்று வருகிறது. எனினும் ஒருசில மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த அதிகாரிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலின் அடிப்படையில் கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்துவதற்கு வலியுறுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவா்களுக்கான இறுதிப் பட்டியல் 1 வாரத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை பயனாளிகள் அறிந்துகொள்ளக்கூடிய அடிப்படையில் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும். அதுமட்டுமின்றி கடந்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரையுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதன்பின் தற்போது வரையுள்ள நகைகளுக்கான வட்டியை அரசே செலுத்தும். இதுவரையிலும் கணக்கு மேற்கொண்டதன் அடிப்படையில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை கிடைக்கும் மற்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பட்சத்தில் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.