தமிழக்தில் கூட்டுறவு துறை சார்பாக 4,530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 180 தொடக்கநிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பட்டு வருகின்றனர். இந்த வங்கி மூலம் குறைந்த வட்டிக்கு நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 13 ஆம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் , சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல மோசடிகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் நகைக் கடன் தள்ளுபடி சலுகையை பெற தகுதி மற்றும் தகுதியற்ற நேர்வுகள் தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டன. வெளி மாவட்டங்களிலுள்ள வங்கி பணியாளர், நகை பரிசோதகர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு 100% ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அரசு சார்பாக உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் பொது நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியுள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்ய துணை பதிவாளர் தலைமையில் ஒவ்வொரு சரகத்திற்கும் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழு தான் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியுள்ள மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேற்பட்ட அனைத்து பொது நகைக் கடன்கள், ஒரே ரேஷன் அட்டை எண்ணின் அடிப்படையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு வழங்கப்பட்ட 40 கிராமிற்கு மேற்பட்ட அனைத்து பொது நகைக்கடன்கள் பெற்று நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியில்லாதவர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகுதி பெற்றோர் மற்றும் தகுதி பெறாதவர்களின் பட்டியலை அனைத்து காரணங்களையும் குறிப்பிட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு 11ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது..