தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அந்த கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2021 ஆம் ஆண்டு பயிர் கடன் வழங்குவதற்காக ரூ.11ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் ரூ.746 கோடி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.534 கோடி பயிர் கடன் வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியது, சேலம் மாவட்டத்தில் ரூ.614.92 கோடி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.502.62 கோடி ஆகும். அதனைத் தொடர்ந்து பயிர் கடன் என்பது விவசாயிகள் பயிர் செய்வதற்காக மட்டும் தான் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு பயிர்க்கடன் அளிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில்நுட்ப குழு கலந்து ஆலோசனை செய்து மாநில தொழில்நுட்ப குழுவிற்கு அளிக்கப்பட்டு ஸ்கேல் ஆப் பைனான்ஸ் அளிக்கப்படுகிறது. மேலும் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பொதுவாக சோழம் மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றிற்கு பயிர்க்கடன் அளவு குறைவாக உள்ளதால், அதிக அளவு பயிர் கடன்களுடன் உள்ள மஞ்சள் மற்றும் வாழை போன்ற பயிர்களை குறிப்பிட்டு கடன் பெற்றுள்ளனர். இதனை அரசின் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பயிர் செய்ததை விட அதிக பரப்பளவில் பயிர் செய்து இருப்பதாக கூறியுள்ளனர். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்து உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட பயிர் கடன் தள்ளுபடியில் 1,11,803 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு ரத்து அறிவிக்கப்படவில்லை. எனவே இந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் முதல்வரை சந்தித்து தங்களுக்கும் பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் விவசாயிகளுக்கு பணி செய்ய வேண்டிய முக்கிய பொறுப்பை கருத்தில் கொண்டு, இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்று கூறி நிலுவையில் உள்ள 53,017 விவசாயிகளுக்கு ரூ.501.63 கோடி அளவிலான பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான சான்றிதழ் அளிக்க அனுமதி அளித்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.