தமிழகத்தில் வனப்பரப்பை உயர்த்துவதற்கு 2½ கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று விலங்குகள் இருப்பிடங்கள் மற்றும் பறவை கூடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது பூங்கா இயக்குனர் கருணை பிரியாவிடம் அமைச்சர் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பூங்காவின் பாதுகாப்புகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.
அதன் பின் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் பேசியபோது, வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்து அனைத்து ஊழியர்களுக்கான உணவு வழங்குதல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரூபாய் 6 கோடி நிதி வழங்கி இருக்கிறார். இந்தியாவிலே வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.
இதில் கூடுதல் வசதிகளை உருவாக்கி பொது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக ரூபாய் 15 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் பூங்காவில் பழுதடைந்துள்ள விலங்குகளின் கூண்டுகள், பறவை கூடாரங்கள் முழுமையாக புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் பூங்காவில் விலங்குகளுக்கு நல்ல உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கு இணங்க வனப் பரப்பை 33% உயர்த்திட வரும் இரண்டு ஆண்டுகளில் மட்டும் இரண்டரை கோடி மரக்கன்றுகளை நடுவதற்கான பெறும் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் வரும் 10 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி மரக்கன்றுகள் வீதம் பல்வேறு இடங்களில் மரங்கள் நடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது என கூறியுள்ளார்.