தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2 வருடங்களுக்கு மேலாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் கல்வித்துறை காலிப் பணியிடங்கள் தொடர்பாக அறிவிப்புகளும், போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் கொரோனா 2-ம் அலை குறைந்ததை அடுத்து பள்ளி,கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்தது. இதையடுத்து தற்போது தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,334 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு விரைவில் வழங்க கோரி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களுக்கு 5 வருடங்களாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று ராமதாஸ் கூறினார். கடந்த 3- 5 வருடங்களாக பதவி உயர்வு மறுக்கப்படுவதால் அவர்கள் மனதளவில் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது அவர்களின் பணி நிலையையும், ஊதியத்தையும், பணி ஓய்வுக்குப் பின் ஓய்வூதியத்தையும் கடுமையாக பாதிக்கும்.
தற்போது தமிழக கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் போதிய அளவு பணி நியமனங்கள் நடைபெறாததால் பணியில் சேர அதிக வயதாகி விடுகிறது. ஆகவே பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும், மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆசிரியர்கள் விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அனைத்து அரசு கலை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு வருடத்தின் அடிப்படையில் பதவி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என்று ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.