தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 2021- 2022ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கையானது சரியான வழிகாட்டும் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும். கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தகவல் கையேட்டில் குறிப்பிட வேண்டும்.
மாணவர் சேர்க்கையில் ஏதாவது விதிமீறல் நடைபெற்றால் அதற்கு சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் மாணவர் சேர்க்கை குழு முழு பொறுப்பேற்க வேண்டும். விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் அனைத்தும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தின் மூலம் சரி பார்க்கப்படும் போது அது போலி சான்றிதழ் என்று தெரிய வந்தால் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுவது மட்டுமல்லாமல் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது.