தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சர், அதிமுகவின் பொதுச் செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை என தான் கால் வைத்து அனைத்து துறைகளிலும் வெற்றி வாகை சூடியவர் செல்வி.ஜெயலலிதா. தன்னம்பிக்கை, அறிவாற்றல், கம்பீரம் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற குணங்களை தனக்கேற்ற கொண்ட ஜெயலலிதா அவர்களுக்கு 73 வது பிறந்தநாள் இன்று. அனைவர் மனதிலும் அம்மா என்று நீங்காத இடம் பிடித்தவர்.
தமிழகத்தில் அம்மா என்று சொன்னாலே நினைவுக்கு வருவது ஜெயலலிதா தான். இன்று ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அதிமுகவை காப்பேன், சட்டமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்று கோட்டையிலா திமுக கொடியை பறக்க வைப்பேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.