முதியவர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்குகிறது.
நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதையொட்டி, 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு இணையதளத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது.
இந்தியாவில் 60வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ளனர். ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.
பூஸ்டர் டோஸ் செலுத்தும் போது ஏற்கனவே செலுத்திய இரண்டு டோஸ் தடுப்பூசியை மட்டுமே செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, 87.35 சதவீதம் பேர் முதல் தவணையும் 61.46 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை இன்று சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஆடிட்டோரியத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.