கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் சுமார் 25 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கையும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கையும் பிறப்பித்துள்ள தமிழக அரசு, பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவித்துள்ளது.
இதனிடையில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டாலும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு செயலிகள் வாயிலாக வகுப்புகள் நடத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளின் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை கவனிக்கும் விதமாக தினசரி வர வேண்டும். இதற்கிடையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதால் ஆசிரியர்களும் பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது. பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.