தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகிய எட்டு பாடங்களை பகுதி நேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களின் பயம் போகும் வழியில் அரையாண்டு, முழு ஆண்டு தேர்விற்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆங்கில வழி பாடப் பிரிவுகளை அதிகரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.