தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து பாடவேளைகளிலும் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். மேலும் மாணவர்களை முழு அளவில் நேரடியாக பள்ளிக்கு வர வைத்து பாடம் நடத்த வேண்டும். இதையடுத்து அரை நாள் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.