காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக 14,400 கோடி ரூபாய் செலவில் நதிகள் இணைப்பு திட்டத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக அப்பகுதி மக்கள் நூறுஆண்டு கால கனவு நிறைவேறபடுமென எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள காவிரி, வைகை, குண்டாறு ஆகிய மூன்று நதிகளையும் இணைக்கும் திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த கர்நாடகம் ஒரு போதும் அனுமதிக்காது. அதற்கான வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறினார். காவிரியில் தமிழகத்திற்கு கூடுதலாக நீரை வழங்க சாத்தியம் இல்லை எனவும், எனது தலைமையிலான அரசு அதற்கு வாய்பளிக்காது எனவும் தெரிவித்தார். காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி தமிழகம் நடந்து கொள்ள வேண்டும் எனவும் எடியூரப்பா கூறினார் .