தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கானஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது.
இதையடுத்து தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்பு , இடவசதி உள்ளிட்டவை எந்தெந்த மாவட்டங்களில் உள்ளது என்பது குறித்த ஆய்வு பணிகளை சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனரகம் செய்து வந்தது.
தொடர்ந்து இதுதொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான இடவசதி மட்டுமின்றி அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
வரும் மார்ச் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் புதிதாக அமைக்கவுள்ள 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மார்ச் 1, 4, 5, 8, 14ம் தேதிகளில் 5 கட்டங்களாக அடிக்கல் நாட்டும் பணிகளானது நடைபெற உள்ளது. அதன் விவரம், மார்ச் 1 – விருதுநகர் மற்றும் ராமநாதபுரம், மார்ச் 4 – கிருஷ்ணகிரி, மார்ச் 5 – நாமக்கல் மற்றும் திண்டுக்கல், மார்ச் 8 – திருவள்ளூர் மற்றும் மார்ச் 14 – திருப்பூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். இதுதொடர்பான பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.