தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அத்திட்டத்தில் சிறிய மாற்றம் கொண்டு வர இருப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியான நபர்களுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூபாய் 25,000 க்கு குறைவாக அந்த இருசக்கர வாகனத்தை வாங்க முடியும். ஆகவே தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் பற்றி பார்க்கலாம். அந்த வகையில் வயது வரம்பு 18-லிருந்து 40 ஆக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்போது 18-லிருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து கல்வித்தகுதி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பதாரர் குறைந்தது 3 வருடங்கள் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். அதன்பின் விண்ணப்பிக்கும் போது LLR சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாஜர் என்ற முன்னுரிமையின்படி ஒருவருக்கு மட்டும் மானியம் வழங்கப்படும்.
அத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், சாதிச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். அதுமட்டுமின்றி விண்ணப்பதாரர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழையும் இணைக்க வேண்டும். வங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் போன்றவற்றுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்கம் நகலை இணைக்க வேண்டும். மேலும் முத்தவல்லியிடம் வக்பில் எத்தனை வருடங்கள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்றிதழையும் இணைக்கவேண்டும். மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (முதல் தளம்), மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரில்சென்று ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.