தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக திருவள்ளூர்,வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்றும் கடலோர மாவட்டங்களும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து நாளை கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.