தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவ துறை சம்பந்தமான பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கொரோனாவை முழுவதுமாக ஒழிப்பதற்கு தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி தமிழக சுகாதாரத்துறை தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் சுகாதார துறையில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் உட்பட 30 ஆயிரம் பணியாளர்களுக்கு கொரோனா காலம் முடிந்த பிறகு பணி நிரந்தரம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.