தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று பகலிலும் மழை தொடரும். பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக ஆம்பூர், வாணியம்பாடியில் பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திம்மாம்பேட்டை நாராயணபுரம் பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 11ம் தேதி வரை 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், குமரி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.