தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது. வருகின்ற 2022 -2023 ஆம் கல்வியாண்டில் 10 அரசு மற்றும் கலை கல்லூரிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கல்லூரிகளை நிறுவ ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் எரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, மற்றும் வேலூர் மாவட்டம் சேர்க்காடு ஆகிய 9 இடங்களில் இருபாலர் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் ஒரு புதிய மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்லூரிகளிலும் இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், இளமறிவியல், இலை நிலை மற்றும் இளமறிவியல் ஆகிய பாடப்பிரிவு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 17 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 17 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 10 கல்லூரிகளுக்கு மொத்தம் 170 ஆசிரியர்கள் மற்றும் 170 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கவுள்ள கல்லூரிகளின் காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.