தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளையும் நாளை மறுநாளும் அனேக இடங்களில் மழை பெய்யும் எனவும் டிசம்பர் 14ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் தெற்கு கடலோர பகுதிகள், வட இலங்கை கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.