வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையை கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் தற்போது புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆம்பூருக்கும் திருப்பத்தூருக்கும் இடையே மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றுக்குள் 100% மின்விநியோகம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 355 துணை மின் நிலையங்களில் 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டன எனவும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் நூறு சதவீதம் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.