தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது.
தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (பிப்.14) நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு கணித தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெறும் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்பட்டு முன்கூட்டியே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், திருவண்ணாமலையில் வினாத்தாள்கள் கசிந்துள்ளன.
ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. திருப்புதல் தேர்வுகளை பொதுத்தேர்வு போல நடத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் வினாத்தாள்கள் கசிந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராமவர்மா உத்தரவிட்டுள்ளார்.