தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் சென்ற 2 வருடங்களாக மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வியில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. அத்துடன் ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றது. இதற்கிடையில் கொரோனா பரவல் குறைவு காரணாமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு பாடச் சுமையைக் குறைக்கும் அடிப்படையில் 1 -12-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை திருத்தியமைத்தது.
அந்த வகையில் 11, 12 ஆம் வகுப்புகளில் 60 முதல் 65% பாடங்கள் மட்டுமே முக்கிய அம்சங்களாக (prioritised Syllabus) எடுத்துக்கொள்ளப்பட்டு, 40-35 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கடந்த 2 வருடங்களுக்கு பின் தற்போதுதான் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் முக்கிய அம்சங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.
அதேபோல் இதர வகுப்புகளைப் பொறுத்தவரையிலும் தோராயமாக 50 சதவீத பாடங்கள் முக்கிய அம்சங்களாக கருதப்பட்டது. அதன்பின் உருமாறிய ஒமிக்ரான் ஏற்படுத்திய 3வது அலை பாதிப்புகள் குறைந்ததை அடுத்து, தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டது. இந்த நிலையில் 2022-23 கல்வியாண்டில் தமிழகம் முழுதும் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதில் அரசுபள்ளி மாணவர்களுக்கு முதல் நாள் அன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் 1 -12 ஆம் வகுப்புகளுக்கு கொரோனா தொற்றுக்கு முந்தைய பாடத்திட்டமே (2019 -20ம் கல்வியாண்டில் அமலான முழு பாடத் திட்டம்) தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் தற்போதைய சூழ்நிலையில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.