1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு, பள்ளி அளவில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால், கடந்த பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் எழுப்பியுள்ள கேள்வி, கடந்த இரு ஆண்டுகளாக தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த நடப்பு ஆண்டிலாவது மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா? என்று கேட்டுள்ளனர்.
அதன்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளார். இச்சூழலில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வானது பள்ளி அளவில் நடைபெறும் என்றும் அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிரத்தியேகமான தேர்வு கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனால் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துறை மூலம் மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே நடப்பு ஆண்டுக்கான பள்ளி வேலை நாளானது மே 13 ம் தேதியுடன் நிறைவுபெறும். இதற்குள் அனைத்து கல்விசார் பணிகளும் முடிக்கப்பட்டு மீண்டும் பள்ளி ஜூன் 13ஆம் தேதி அன்று திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.